×

உடல் திறனை அதிகரிக்க கவாத்து பயிற்சிகளில் போலீசார் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் எஸ்.பி. பத்ரி நாராயணன் அறிவுரை

 நாகர்கோவில், அக்.20: குமரி மாவட்டத்தில் மாதாந்திர கவாத்து பயிற்சிகளில் போலீசார் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என எஸ்.பி. பத்ரிநாராயணன் கூறி உள்ளார்.   பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போலீசாருக்கு ஏற்படும் அதிக மன அழுத்தத்தால் மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தற்போது கொரோனா காரணமாகவும் போலீசார் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவல் துறையினர், உடல் திறன் பேணுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக மாதந்ேதாறும் போலீசாருக்கு கவாத்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குமரி மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான கவாத்து பயிற்சி, நேற்று காலை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. எஸ்.பி. பத்ரி நாராயணன், இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இதில் ஆயுதப்படை போலீசார், நாகர்கோவில் சப் டிவிஷனுக்கு உட்பட்ட போலீசார் என சுமார் 600 பேர் பங்கேற்றனர். இதில் யோகாசனம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. போலீசார் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். காவலர்களின் அணிவகுப்பு, காவல் நிலையத்தில் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பொதுமக்களிடம் உள்ள அணுகுமுறைகள், குற்ற வழக்குகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறுகையில், மன அழுத்தம், உடல் திறன் அதிகரித்தலுக்காக நடத்தப்படும் மாதாந்திர கவாத்து பயிற்சியில் அனைத்து போலீசாரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

காவல் நிலையங்களில் பணியாற்றுகிறவர்கள் அந்தந்த காவல் நிலையங்களிேலா அல்லது சப் டிவிஷனுக்கு உட்பட்ட ஒரு இடத்திலோ பயிற்சிகளை மேற்ெகாள்ள வேண்டும் என்றார்.  ஆயுதப்படை டி.எஸ்.பி. சாம் வேத மாணிக்கம் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். தக்கலை சப் டிவிஷனுக்குட்பட்ட 11 காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கான கவாத்து பயிற்சி மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி வளாகத்தில் நடந்தது. டிஎஸ்பி ராமசந்திரன் தலைமை வகித்தார். இதுபோல் குளச்சல் சப் டிவிஷனுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கான கவாத்து பயிற்சி கருங்கல் மூசாரியில் உள்ள உள்ள அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் நடந்தது. இதில், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 167 போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : parade exercises ,Badri Narayanan ,
× RELATED தென் மண்டலத்தில் முன் மாதிரியாக...