×

கோரிக்கையை கேட்காமல் மனுக்கள் பெறுவதா? கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா

திருவண்ணாமலை, அக்.20: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கடந்த மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக செல்போன் மூலம் குறைகளை கேட்டு தீர்வு காணும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு அளிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க நேற்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. குழந்தைகளுடன் வந்த பெண்கள், முதியவர்கள் ஆகியோர் வரிசையில் நிற்க முடியாமல் தவித்தனர். தொடர்ந்து, வழக்கம்போல், மனு அளிக்கும் வரிசையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனாலும், தள்ளு முள்ளு மற்றும் நெரிசலை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. சமூக இடைவெளியும், முகக்கவசமும் இல்லாதது அச்சத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, அலுவலகத்துக்கு வெளியே நுழைவு வாயிலில் அமர்ந்தபடி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டனர். பெரும்பாலான மனுக்கள், முதியோர் உதவித்தொகை, கடனுதவி, சுய தொழில் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கப்பட்டது. மேலும், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராம ஊராட்சியில், முன்னாள் தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் பிரகாஷ் ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு ஊராட்சி நிதியில் முறைகேடு செய்திருப்பதாக வார்டு உறுப்பினர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

இந்நிலையில், கோரிக்கைகள் குறித்து விசாரிக்காமல், அவசர அவசரமாக மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டதாலும், மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்காததாலும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், விடுமுறையில் இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே, கலெக்டர் இல்லாததும் பொதுமக்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

இதையடுத்து, மனுக்கள் பெற்று விசாரணை நடத்த வேண்டும், ஒப்புகை ரசீது வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் அனைவரும் மனுக்களை பெற வேண்டும், பொதுமக்களை அதிகாரிகள் அலைகழிக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.தொடர்ந்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்ஹ்டை நடத்தினர். ஒவ்வொரு மனுவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கி கூறினர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Collector's Office ,
× RELATED வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை கோரி பெண் மனு