×

ஊக்க ஊதிய உயர்வு ரத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போராட்டம்

சிவகங்கை, அக்.20: ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணையை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அக்.28ல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்: ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1969ம் ஆண்டு முதல் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஒரு ஆசிரியர் தனது பணிக்காலத்தில் அதிகபட்சமாக இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை பெறலாம். இந்நிலையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்ட அரசாணை எண் 37, நாள்:10.3.2020ல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10.3.2020முதல் முன் ஊதிய உயர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை.

ஆனால், 15.10.2020ல் அரசாணை எண்: 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல அரசாணைகளை தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அரசாணைகள் 37, 116 ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40ஆகக் குறைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28.10.2020அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது. இதையடுத்து 28.10.2020அன்று சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Tags : Primary school teachers ,pay hike ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா