×

திருவெற்றியூரில் வீணடிக்கப்பட்ட அரசு பணம்

திருவாடானை, அக்.20: திருவெற்றியூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் கழிப்பறைகள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்களின் வருகைக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக ஊராட்சி சார்பில் கோயிலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரண்டு கழிப்பறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் உள்ள கழிப்பறை ஒதுக்குப்புறமான பகுதியில் இருப்பதால் பக்தர்கள் அங்கு செல்லாமல் கோயிலின் அருகே வெட்டவெளியில் இயற்கை கடன்களை கழித்து விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கோயிலின் அருகே கழிப்பறை கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையால் இரண்டு பக்கங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் இந்த கழிப்பறை திறந்து வைக்க வில்லை மூடியே கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் ஒதுக்குப்புறமாக தேவஸ்தான கழிப்பறை உள்ளதால் அங்கு செல்வதில்லை. எனவே மூடிக்கிடக்கும் கழிப்பறையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள். இதுகுறித்து திருவொற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் உடனடியாக இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊராட்சி நிர்வாகம் இன்னும் கழிப்பறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு