×

திருப்புல்லாணி அருகே வருவாயை அள்ளி தரும் தோட்டக்கலை பூங்கா

கீழக்கரை, அக்.20: ராமநாதபுரம் என்றாலே வறட்சி மாவட்டம் என்ற கருத்து உள்ளது. அதனை மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாதனேந்தல் தோட்டகலை பூங்கா, திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இத்தோட்டத்தை சமீபத்தில் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காய்கறி தோட்டம், கறவை மாடு, வெள்ளாடு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மூலிகைச் செடிகள், பண்ணைக்குட்டை, மீன் வளர்ப்பு, காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிப்பு, கோமியம் மூலம் பினாயில், சாணி மூலம் பஞ்ச கவ்யம் தயாரிப்பு என தோட்டக்கலை பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு காய்கறி, கீரைகள் விற்பனை செய்யப்பட்டு அப்பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. கறவை மாடு, வெள்ளாடு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு இங்கு பொதுமக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இதில் வரும் வருவாய் மூலம் மகளிர் குழுவினர் மேம்பாடு அடைவர். இத்திட்டம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (நூறு நாள் வேலைத்திட்டம்) மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு தோட்டக்கலைப் பண்ணைக்கு தோட்டம், கூரைகள், கழிப்பறை, பண்ணைக்குட்டை உள்ளிட்டவற்றுக்காக ரூ.20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பண்ணையைப் பராமரிக்க தினமும் நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகள் வேலை செய்கின்றனர். இதன் மூலம் ஊராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

தாதனேந்தல் ஊராட்சித் தலைவர் கோகிலா ராஜேந்திரன் கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் 3 ஏக்கரில் குறுங்காடு அமைத்துள்ளோம். இதில் பழ மரங்கள், பயன்தரும் மரங்கள், நிழல் தரும் மரங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் இரண்டரை ஏக்கரில் தோட்டக் கலைப்பண்ணை அமைத்துள்ளோம். இங்கு ரசாயன உரமின்றி இயற்கை முறையில் காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் மகளிர் குழுவினர் வருவாய் ஈட்ட அரசு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் ஊராட்சி மக்களும், மகளிர் குழுவினரும் பயன் அடைவர். இதற்கான ஏற்பாடுகளை செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியருக்கும் நன்றி கூறினார். விரைவில் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் படகில் சுற்றுலா செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய உள்ளோம் என்றார்.

Tags : park ,Thirupullani ,
× RELATED முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!