×

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சோழவந்தான், அக். 20:  தினகரன் செய்தி எதிரொலியாக  சோழவந்தான் அருகே  நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கல்புளிச்சான்பட்டியில் கிணற்று பாசனம் மூலம் பயிரிட்ட சுமார் 200 ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதில் சுமார் 80 ஏக்கர் அறுவடை செய்யப்பட்டு அங்கிருந்த நெல் கொள்முதல் நிலையம் மூலம்  விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால் சுமார் 30 ஏக்கர் அளவில் அறுவடை செய்த 3 ஆயிரம் மூட்டைகள் இங்குள்ள உலர்களத்திலும், அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் வயலிலும், விற்பனை செய்ய வழியின்றி  கிடந்தன. இதனால் விவசாயிகள் படும் துயர் குறித்து தினகரனில் படத்துடன் செய்தி  வெளியானது.

இதையடுத்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் நேற்று நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் நெல்லை எடை போட்டு எடுத்தனர். இதில் ஒரு கிலோ நெல் பொதுரகம் ரூ.19.18 பைசா விலையிலும், சன்னரகம் ரூ.19.58 பைசா விலையிலும், தினம் ஆயிரம் மூட்டைகள் அளவில் மொத்தம் 22 ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி பால்பாண்டி கூறுகையில், `` நெல் கொள்முதல் நிலையம் மூடியதால் உலர்களத்தில் இருந்த நெல் அதிகளவு மழை, வெயிலால் பாதித்ததால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்த நெல்லை வேறு வழியின்றி,  குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் கொண்டு போய் விற்பனை செய்ததால், அதிலும் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் தான். தாமதாயினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் துவக்கிய தமிழக அரசுக்கும், அதற்கு காரணமாக தினகரன் நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த முறை   அரசியல்வாதிகள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தது. அந்த தவறு மீண்டும் நடக்காமல், தற்போது முழுவதும் விவசாயிகளின் நெல்லை மட்டும் கொள் முதல் செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : opening ,Cholavanthan ,paddy procurement center ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு