×

தேர்வு கட்டணம் செலுத்த சமூக இடைவெளியை மறந்து வங்கியில் திரண்ட மாணவர்கள்

திருமங்கலம், அக்.20 : கப்பலூரிலுள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த சமூக இடைவெளியை மறந்து திருமங்கலம் வங்கியில் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் உள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் மூடியுள்ள நிலையில் ஆன்லைன் மூலமான வகுப்புகள் இந்த கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்வு கட்டணம் மற்றும் கல்லூரி கட்டணங்கள் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

இதனையொட்டி நேற்று காலை திருமங்கலம் ஸ்டேட் வங்கியில் நூற்றுக்கணக்கில் திரண்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் தேர்வுகட்டணம் செலுத்த முண்டியடித்தனர். கொரோனா குறித்த கவலையின்றி சமூக இடைவெளியின்றி மறந்து மாணவர்கள்  கூடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகமும், வங்கி நிர்வாகமும் இதனை குறித்து கண்டுகொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால் தொற்றுபரவும் ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளதாக பெற்றோர் கருத்து தெரிவித்தனர். தேர்வு கட்டணம் செலுத்த முறைக்கு உரிய பாதுகாப்புடன் கூடிய மாற்றுஏற்பாடுகளை செய்ய வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : bank ,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...