நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது சிட்கோ பணி தீவிரமாக நடப்பது ஏன்? எம்பி ஜோதிமணி கேள்வி

திண்டுக்கல், அக். 20: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஆர்.கோம்பை சீலக்கரட்டில் சிட்கோ பணி தீவிரமாக நடப்பது ஏன் என எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை சீலக்கரட்டில் வனத்துறைக்கு சொந்தமாக 57 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலான வேம்பு, புளியமரம், தோதகத்தி, பூவரசம் போன்ற பலவகையான மரங்கள் உள்ளன. இங்கு தமிழக அரசு அறிவித்தபடி சிட்கோ அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே வறட்சி காரணமாக பாதிப்படைந்துள்ள குஜிலியம்பாறை பகுதியில் மரங்களை வெட்டுவதால் மேலும் பாதிக்கப்படும். எனவே கரட்டு பகுதியில் சிட்கோ அமைக்காமல் தரிசு நிலமாக உள்ள சமவெளி பகுதியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் எம்பி ஜோதிமணி தலைமையில் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மரங்களை வெட்டி ஏற்றி கொண்டிருந்த வாகனங்களை முற்றுகையிட்டார். இதையடுத்து மரங்கள் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று எம்பி ஜோதிமணி சீலக்கரட்டில் அமைக்காமல் சமவெளியில் சிட்கோ அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆர்.கோம்பை சீலக்கரடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் நீதிமன்றம் அறிக்கை கேட்கும் போது சிட்கோ பணி தீவீரமாக நடப்பது ஏன்?. சிட்கோ வேறு பகுதியில் அமையும் வரை எங்களது போராட்டம் தொடரும்’ என்றார்.

Related Stories:

>