×

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் கருப்பு பேட்ஜ் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.20: ஊழலுக்கு துணை போகும் உயர் அதிகாரிகளை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித் துறையில் எவ்வித விசாரணையும் இன்றி ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் 17 (பி) குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்குவதை கைவிட வேண்டும், பிற துறை பணிகளை செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும், ஊழலுக்கு துணை போகும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டத் தலைவர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வசந்தன், செயலாளர் செந்தில், பொருளாளர் சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குடவாசலில் வட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலும், நன்னிலத்தில் வட்டத் தலைவர் வினோத் தலைமையிலும், கொரடாச்சேரியில் வட்டத் தலைவர் கண்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி: மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 50 க்கும் மேற் பட்ட ஊழியர்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இலரா வட்ட துணை தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சங்க மாவட்ட தலைவர் வசந்தன், செயலாளர் செந்தில், இணைச்செயலாளர் மோகன் ஆகியோர் பேசினர். முடிவில் மெர்சி பெல்வினா நன்றி கூறினார். வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வட்டத் தலைவர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் அரசு ஊழியர் சங்கத்தலைவர் ரவி நன்றி கூறினார். மேலும் வரும் 22ம் தேதி தமிழக முதல்வர், தலைமைய செயலாளர், பாரத பிரதமர், ஜனாதிபதி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனைத்து வட்ட கிளைகளிலிருந்தும் கோரிக்கை கடிதம் அனுப்புதல் எனவும், வருகின்ற 28ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் ஆயிரம் ஊழியர்களை திரட்டி மாநிலத்தலைவர், மாநில செயலாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், கணினி அலுவலர் சங்க செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க வட்ட பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags : Rural Development Officers Association Black Badge Demonstration ,