×

குறைந்த மின் அழுத்தத்தால் கடும் பாதிப்பு துணை மின்நிலையத்தை மாற்றித்தர விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.20: குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதனப் பொருட்கள் கடும் சேதமடைந்து வருகிறது. எனவே, மீண்டும் பாச்சிக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்தே மின் வினியோகத்தை மாற்றித்தர வலியுறுத்தி ஆலங்குடி பகுதி கிராம மக்கள் மின்வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அரையப்பட்டி, வன்னியன்விடுதி, வெள்ளக்கொல்லை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக பாச்சிக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்று வந்தது. அப்பொழுதெல்லாம் எப்போதாவது ஏற்படும் சிறு, சிறு தடங்கலைத் தவிர மின் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து பாச்சிக்கோட்டைக்குப் பதிலாக வடகாடு துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்று வருகிறது.

வடகாடு துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்ற நாளிலிலிருந்து விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் வைத்திருப்போர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் முறையற்ற மின் விநியோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. வீடுகளில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளன. இதனால், எங்கள் பகுதி மக்கள் துயரங்களைச் சந்தித்து வருகிறோம். எனவே, எங்கள் பகுதிகளுக்கு ஏற்கனவே இருந்த படி பாச்சிக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்தே மின் விநியோகத்தை மாற்றித்தர வேண்டுகிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : substation ,
× RELATED துணை மின்நிலையம், கால்நடை பண்ணை கட்டிடம் திறப்பு