×

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் குடியிருப்பை சூழ்ந்தது

நாகை, அக்.20: நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி குடியிப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் துர்நாற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாகை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. அடிக்கடி பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டு இது நகராட்சிக்கு சவால்விடுவதுபோல் அதனை சரி செய்வதற்கு நகராட்சி பணியாளர்கள் திணறி வருவதும் வாடிக்கை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி, தேங்கி நேற்று கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விட்டது.

இதனால் துர்நாற்றம் தாங்கமுடியாமல் பப்ளிக்ஆபீஸ் சாலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் தொற்றுநோய் பரவிடுமோ என்ற அச்சத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். பாதாள சாக்கடை அடைப்பை சீர் செய்வதற்கு என்று நகராட்சியில் போதுமான பணியாளர்களும் இல்லை. அதற்கு ஏற்ப நவீன வாகனங்களும் இல்லை. இதன் காரணமாக பாதாள சாக்கடை அடைப்பு நகராட்சிக்கு பெரும் சோதனையாகவே உள்ளது. மேன்ஹோல் வாயிலாக அடைப்புகளை சீர் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலகள் விரும்புகின்றனர். விழா காலம் நெருங்குவதால் பொதுமக்கள் மீது நகராட்சி நிர்வாகம் அக்கரை கொண்டு பாதாள சாக்கடை அடைப்புகளை சீர் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமையும் சில தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Nagai Public Office Road ,
× RELATED பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தபோது...