திருக்குவளை தாசில்தார் அலுவலக வளாகத்தில் சிட்டா அடங்கல் வழங்காததை கண்டித்து குத்தகைதாரர்கள் உண்ணாவிரதம் 2 மணிநேரம் பரபரப்பு

கீழ்வேளூர், அக்.20: நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வலிவலம் தேசிகர் பண்ணையின் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் 1970ம் ஆண்டு, ஆண்டுக்கு 3.5 மூட்டை நெல் வழங்க வேண்டும் என்று குத்தகைக்காக விளை நிலங்களை அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆண்டுகாலம் நிலங்கள் சாகுபடிதாரர்வசம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக குத்தகைதாரர்கள் குத்தகை நெல் கொடுக்காமல் இருந்து வரும் நிலையில் வலிவலம் தேசிகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கிராம நிர்வாக அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் அறக்கட்டளை நிலங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப் பட்ட விவசாயிகளிடம் அறக்கட்டளையில் இருந்து கடிதம் வந்துள்ளது, எனவே உடன் சுமுகமான முறையில் பேச்சுவார்தை செய்து தீர்வு கண்டு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் எங்களுக்கு 1970ம் ஆண்டு உபரி நிலங்கள் அரசாங்கத்தால் அதிகாரிகளால் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறி எங்களுக்கு சிட்டா, அடங்கல் உடன் வழங்க வேண்டும் என்று வட்டாட்சியர், நாகை கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சிட்டா, அடங்கல் வழங்க கால தாமதம் செய்வதால் தற்போது சாகுபடி செய்துவரும் நெல் பயிருக்கு வங்கிகளில் கடன் பெற முடியாமலும், காப்பீட்டுதொகை கட்ட முடியாமல் அவதிப்படுவதாக கூறி உடன் சிட்டா, அடங்கல் வழங்ககோரி நேற்று காலை திருக்குவளை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்அறக்கட்டளை நிலங்களை சாகுபடி செய்து வரும் 66 விவசாயிகள் சொக்கலிங்கம் தலைமையில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈப்பட்டனர்.

இதையடுத்து வட்டாட்சியர் சாந்தி, டிஎஸ்பி முருகவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாகை கோட்டாட்சியர் முன் இரு தரப்பை சேர்ந்தவர்கள் ஆவணங்களுடன் சென்று பேச்சுவார்தை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

விவசாயிகள் உண்ணாவிரதம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories:

>