சமூக விரோத செயல்களை தடுக்க அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

திருப்பூர்,அக்.20: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் தொலைபேசி வாயிலாக, கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஒரு சிலர் நேரிலும் மனு அளித்தனர். திருப்பூர் கே.செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் வளாகம் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் பள்ளி வளாகத்தை சுற்றிலும், எவ்வித சுற்றுச்சுவரும் இல்லாத காரணத்தால் பல சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது. சில நேரங்களில் பள்ளி தளவாடங்கள் சேதப்படுத்தப்படுகிறது. போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

விவசாயிகள் அளித்தம் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி துவங்குவதற்கு முன்பாக உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது பவர்கிரிட்  நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இழப்பீடு வழங்கிய பின்பு பணிகளை தொடர வேண்டும் என்று தெரிவித்தனர்.

அவிநாசி வட்டம் கணியாம்பூண்டி ஊராட்சி ஆத்துமேடு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள நொய்யல் ஆறு, கவுசிகா நதிக்கு மத்தியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. இதில் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தோடு வாழ்ந்து வருகிறோம். பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என்றனர். இதேபோல், குடிநீர் பிரச்னை, தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 87 அழைப்புகள் தொலைபேசி மூலம் வரபெற்றது.

Related Stories: