×

தீயணைப்புத்துறை சார்பில் மழை கிராமங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

ஆனைமலை, அக். 20:   ஆனைமலை அருகே உள்ள சர்க்கார்பதி, நாகரூத்து கிராமங்களில் நேற்று தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலை அருகே உள்ள நாகரூத்து பழங்குடியின கிராமத்தில் கடந்த ஆண்டு பருவ மழைக்காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேற்றில் புதைந்தன. பெண் குழந்தை ஒன்றும் உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், பொள்ளாச்சியில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் நேற்று நாகரூத்து கிராமத்தில், பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அங்குள்ள ஊட்டுக்கால்வாயில், தீயணைப்பு துறையினர் நீரில் அடித்து செல்பவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் 8 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர், வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன் கூறியதாவது: ‘பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து, பொதுமக்கள் காத்துக்கொள்ள, தங்களிடம் உள்ள காலி பிளாஸ்டிக் கேன், தெர்மாகோல், லாரி டியூப் ஆகியவற்றை கொண்டு வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இங்கு வசிக்கும் 20 பழங்குடி இளைஞர்களுக்கு, மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரிடர் காலங்களில் பொள்ளாச்சியிலிருந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் ஏற்படும் உயிர் சேதங்களை தவிர்க்க உதவியாக இருக்கும், என்றார்.

Tags : rain villages ,fire department ,
× RELATED நத்தம் அப்பாஸ்புரம் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்