×

பாலியல் நோயால் சிறை கைதிகள் பாதிப்பு


கோவை, அக்.20: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 14 மாவட்ட சிறை, 318 கிளை சிறைகள் உள்ளன. கைதிகள் சிலர் எய்ட்ஸ், காச நோய் மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் சிலர் சிறையில் நோய் பாதிப்பினால் இறந்து விடுகின்றனர். இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்த சிறைத்துறை நிர்வாகம், சிறையில் மருத்துவ பரிசோதனை நடத்துவது அவசியம் என தெரிவித்தது. இதன்படி மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் காச நோய் தடுப்பு திட்டம் சார்பில் சிறைகளில் மருத்துவ சோதனை நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிறைகளில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை அடிக்கடி நடத்தப்படுகிறது. இருப்பினும் அபாயகரமான நோயினால் குறிப்பாக மாரடைப்பு, பாலியல் தொடர்பான நோய் காரணமாக சிறை கைதிகள் இறப்பது நடக்கிறது. இது தொடர்பாக சிறைத்துறையினர் கூறுகையில், ‘‘சிறைக்கு வரும் ஆண் கைதிகள் சிலர், பாலியல் ரீதியான தொழில் செய்யும் பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

விபசார வழக்கில் போலீசில் சிக்கும் பெண்கள் சிலருக்கு எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோய் இருக்கிறது. ஆண் கைதிகள் சிலர் விபசார பெண்களுடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார்கள். சிறையில் இருக்கும் கைதிகள் சிலரை விபசார பெண்கள் ஜாமீன் எடுத்து வெளியே அழைத்து செல்கிறார்கள். முறைகேடான உறவால் எச்.ஐ.வி. பாதிப்பு கைதிகள் வட்டாரத்தில் அதிகமாகி வருகிறது. எச்.ஐ.வி. பாதிப்புள்ள கைதிகள், சக கைதிகளுக்கு நோய் பரப்பும் சூழலை தடுக்கவேண்டியுள்ளது. சிறைச்சாலை, சமூக நலத்துறை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் சார்பில் எச்.ஐ.வி. பரிசோதனை திட்டம் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இதில் எச்.ஐ.வி பாதிப்புள்ள நோயாளிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்க, சிறையில் இருந்து வெளியே சென்றால் சுகாதார துறை மூலமாக கண்காணித்து மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Tags : prison inmates ,
× RELATED சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது...