×

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசல் ஈரோட்டில் அசம்பாவித சம்பவம் தடுக்க 22 கண்காணிப்பு கோபுரம்

ஈரோடு, அக். 20: ஈரோடு மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி, கடை வீதிகளில் கூட்ட நெரிசலில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள ஜவுளி கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடை வீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகரில் 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் (வாட்சிங் டவர்) அமைக்க முடிவெடுக்கப்பட்டு, தற்போது ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்தடுத்த பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து ஈரோடு எஸ்பி. தங்கதுரை கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் மக்கள் கூட்டத்தையும், போக்குவரத்தையும் கட்டுப்படுத்த பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, கனி மார்க்கெட், கிருஷ்ணா தியேட்டர், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் தற்ேபாது மணிக்கூண்டு பகுதியில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு பைனாக்குலர் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், மாநகரில் முக்கிய சாலைகளிலும், கடை வீதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும். மக்கள் கூட்டம் அதிகரிக்கும்போது போலீசார் கூட்டத்தோடு கூட்டமாக சென்று கண்காணிக்கவும், 20 அடிக்கு ஒரு போலீசார் வீதம் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கோபி, சத்தி, பவானி, பெருந்துறை சப் டிவிசன் பகுதியில் 32 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. மாநகரில் ஆயுதபூஜை விடுமுறை நாளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்தால் ஆர்கேவி ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : incident ,festival ,Erode ,Diwali ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...