ஆடு, மாடு கொட்டகை அமைப்பதில் கோடிக்கணக்கில் முறைகேடு விவசாயிகள் பகீர் புகார் கிசான் சம்மான் மோசடியை தொடர்ந்து

திருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில், ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 10 மாடுகளுக்கான கொட்டகை அமைக்க அதிகபட்சம் ₹2.15 லட்சம் வரையும், 30 ஆடுகளுக்கான கொட்டகை அமைக்க ₹1.80 லட்சம் வரையும் செலவிடப்படுகிறது. மேலும், நாட்டு கோழி வளர்க்க 100 கோழிகளுக்கான கொட்டகை அமைக்க அதிகபட்சம் ₹77 ஆயிரம் எனவும், அதிகபட்சம் 250 கோழிகளுக்கு ₹1.05 லட்சம் வரையும் இத்திட்டத்தில் செலவிடப்படுகிறது. கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மூலம், இத்திட்டத்தில் தகுதி பெறும் பயனாளிகளுக்கு கொட்டகைகள் அமைத்து தரப்படுகிறது. கொட்டகை அமைப்பதற்கான நிதி முழுவதும், நூறுநாள் வேலைத்திட்ட நிதியில் இருந்து செலவிடப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகபட்சம் ₹50 ஆயிரம் மதிப்பிலான கொட்டகையை அமைத்து, ₹2.15 லட்சம் வரை கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவித்த தரத்தில் கொட்டகைகள் அமைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், கால்நடைகளுக்கான ெகாட்டகைகள் அமைக்கும் பொறுப்பு ஒப்பந்ததாரர்களிடம் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதால், திட்ட நிதியில் 50 சதவீதம்கூட செலவிடுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வாக்கடை புருஷோத்தமன் கூறியதாவது: கால்நடைகளுக்கு பாதுகாப்பான இரும்பு தளவாட பொருட்களால் கொட்டகை அமைக்கும் திட்டம் மிகவும் பயனுள்ளது. ஆனால், தகுதியான விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த தரத்தில், மதிப்பில் கொட்டகைகள் அமைக்கவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் ₹60 கோடி மதிப்பில் கால்நடை கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதில், மிகப்பெரிய அளவில் பல கோடிக்கு முறைகேடுகள் நடந்திருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் துணையுடன் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதேபோல், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட கால்நடை கொட்டகைகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 2 மாடுகள் வைத்துள்ளவர்களுக்கு, 10 மாடுகள் வைத்திருப்பதாக கொட்டகை அமைத்துள்ளனர். அதேபோல், ஆடுகளுக்கான கொட்டகையும் முறையான தரப்பில், பரப்பளவில் இல்லை. கண்துடைப்பாக கொட்டகை அமைத்து, பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 அடிக்கு 14 அடி கொட்டகை அமைக்க அதிகபட்சம் ₹1.50 லட்சம் வரையும், 24 அடிக்கு 14 அடி கொட்டகை அமைக்க ₹2.15 லட்சம் வரை செலவிடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் கொட்டகைகள் அமைக்கப்பட்டதாக சொல்வதை அதிகாரிகள் ஆதரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும். பசுமை வீடு கட்டும் திட்டம் போல, இத்திட்டத்தின் நிதியை பயனாளிக்கு நேரடியாக வழங்குவதில்லை. ஊழல் செய்வதற்காகவே ஒப்பந்ததாரர் மூலம் அமைக்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் ₹18 கோடி வரை முறைகேடு நடந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது ஆடு, மாடு, கோழிகளுக்கான கொட்டகை அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>