×

ேதனி கலெக்டரிடம் இனி மனு கொடுக்க மாட்டோம்

தேனி, அக். 18: ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் பொதுச்செயலாளர் பொன் காட்சி கண்ணன், துணைச்செயலாளர் ரஞ்சித், மாவட்ட செயலாளர் கொடி அரசன், பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டரை சந்திக்க சுமார் 1 மணி நேரமாக காத்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து கலெக்டர் அறையிலிருந்து வெளியே வந்த கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனு அளிக்க விவசாயிகள் சென்றனர். அப்போது,`` வேலை நாளில் மனு அளிக்க வாருங்கள்’’ என்று சொல்லி மனு வாங்காமல், அவர் விவசாயிகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ``88 சதவீதம் விவசாயிகள் நிறைந்த நாட்டில் விவசாயிகளின் கோரிக்கை மனுவை வாங்குவதற்கு கலெக்டர் மறுப்பது ஏற்கமுடியாது. அதை வாங்குவதற்கு வேலை நாள் என்று காரணம் சொல்வது விவசாயிகளை அவமதிப்பதாக உள்ளது. தேவாரம் அருகே சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பது தொடர்பாக மனு அளிக்க வந்தோம். இந்த மனுவை கலெக்டர் வாங்காததால் இனிமேல் எந்த ஒரு கோரிக்கை மனுவையும் எங்களது விவசாயிகள் சங்கம், இந்த கலெக்டர் இருக்கும் வரை அளிக்க மாட்டோம். எங்களது கோரிக்கையை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவித்து தீர்வு காண்போம்’’ என்று தெரிவித்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர்.

Tags : Ethan Collector ,
× RELATED (வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்