×

வயது வரம்பு அரசாணையை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, அக். 18: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கை: பள்ளிக்கல்வித்துறை அரசாணையின்படி (எண்.12, நாள்.30.1.2020) ஆசிரியர்கள் நியமனம் வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படும் போது பொது பிரிவினருக்கு வயது வரம்பு 40ஆகவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், விதவை உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வயது 45ஆகவும் இருந்தது. ஆனால் தற்போது வெளி வந்துள்ள இந்த அரசாணை மூலம் ஆசிரியர் வேலை வாய்ப்பு என்பது முற்றிலும் உள்நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம். ஆனால் அதில் அவர் வெற்றி பெற்றாலும்கூட இந்த அரசாணையால் ஆசிரியராக முடியாது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாத நிலையில் அவர்கள் பணியில் சேர முடியவில்லை. இப்போது அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதியே ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 40வயதை கடந்த நிலையில் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் கூட இந்த அரசாணையின் மூலம் அவர்கள் பணியில் சேர முடியாது. ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் பணி நியமனத்திற்கு வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூகநீதிக்கு எதிரான செயலாகும். எனவே இந்த அரசாணையை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...