×

இந்த நாள் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு

கொடைக்கானல் அருகே சுமார் 40 கி.மீ தொலைவில் வெள்ளகெவி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியூர், கடப்பாறைகுழி, சின்னூர் காலனி மலைக்கிராமங்கள் உள்ளன. சாலை வசதி இல்லாத இந்த மலைக்கிராமத்திற்கு சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், பெரியகுளம் சோத்துப்பாறை வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒற்றையடிப்பாதை வழியாக காட்டுப்பகுதியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.  அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பெரியூர், சின்னூர்காலனி பகுதிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டுமெனவும், அடிப்படை வசதிகளான சாலை வசதி ,குடிநீர் வசதி போன்றவற்றை செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

திமுக உறுப்பினர் சேர்ப்பு
நத்தம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஊராளிபட்டி ஊராட்சியில் உள்ள  சீரங்கம்பட்டியில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் அடையாள அட்டைகளை  வழங்கினார்.  இதில்  முன்னாள் ஒன்றிய பொருளாளர்  வீரன், மாவட்ட பிரதிநிதி  இஸ்மாயில், ஒன்றிய துணைச்செயலாளர் முருகேசன், சொக்கலிங்கம்  உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்துல்கலாம் பிறந்த நாள்
திண்டுக்கல் மாவட்டம், பழைய செம்பட்டியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் வீருசின்னு தலைமை வகித்தார். தீயணைப்பு துறை அலுவலர் மருதுபாண்டி, படம் தாண்டி வாசிப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்காகண்மணி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக சிலம்பக்கலை குறித்தும்,  உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, பொன்மொழிகள் அடங்கிய புத்தகம், எழுது பொருட்கள், மரக்கன்று, சோப்பு, இனிப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, செம்பட்டி-தமிழ்நாடு கல்வி பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

600 டூவீலர்கள் பொது ஏலம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் மற்றும் விபத்து ஏற்பட்ட கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என 600 வாகனங்கள் ேநற்று பொது ஏலம் விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பாக திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த ஏலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  முன்னுரிமை அளிக்கபட்டது. 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் டூவீலர்களை குறைந்த விலையில் ஏலம் எடுத்துச் சென்றனர். இந்த ஏலத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா துவக்கி வைத்தார். மேலும் ஏலம் விடப்படும் வாகனங்களை, ஏலம் எடுப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்ைல.

1 லட்சம் கொரோனா பரிசோதனை
திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மதுரை, தேனி, கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முயற்சியால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் சுமார் 4,400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மேலும் குறைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இன்று முதல் காய்கறிகள் ஏலம்
ஒட்டன்சத்திரம், பழனி சாலையில், குழந்தைவேலப்பர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தும் இன்று ஏலம் விடப்படும் என்றும், வியாபாரிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு தர வேண்டுமென தக்காளிக்கடை உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திரையரங்குகளை திறக்க வேண்டாம்
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் கிருபாகரன் அறிக்கை: மத்திய அரசு ஐந்து கட்டமாக தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு முழுவதுமாக சரியாகவில்லை. தற்போது அரசு பஸ்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்கின்றனர். விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டால்,மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாது. இதனால் நோய் தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திரையரங்குகளை திறக்க வேண்டாம் என அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : inspection ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...