×

நெல் கொள்முதலில் குறைபாடு களைய ஆக்கபூர்வ நடவடிக்கை

தஞ்சை, அக். 18: நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இனியேனும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு குறைபாடுகளை களைய தமிழக அரசுக்கு ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை. நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவது குறித்தும் விவசாயிகளின் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் ஒரு நெல்மணி கூட வீணாகினால் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது அதற்குரிய பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும், விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்ற கடுமையான வார்த்தையை பயன்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற கண்டனம் காரணமாக தலைமை அலுவலக விழிப்புக்குழு லஞ்ச ஒழிப்புத் துறை மூலமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படலாம். அகப்பட்ட பணியாளர்கள் வேலை இழப்பதும் அவர்களது குடும்பங்களும் அவமானத்திற்குள்ளாவதைத் தவிர வேறு தீர்வு ஏதும் ஏற்படாது. நுகர்பொருள் வாணிபக்கழகம் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான கட்டமைப்புள்ள மாபெரும் மக்கள் சேவையாற்றுகின்ற நிறுவனம். இந்த நிறுவனத்தை பாதுகாப்பதன் மூலமே விவசாயிகளையும் சாதாரண ஏழை எளிய மக்களையும் பாதுகாக்க முடியும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தொழிற் சங்கங்களையும் விவசாயிகளையும் கலந்தாலோசித்து நெல் கொள்முதலில் தடையின்றி குறையின்றி கொள்முதல் செய்வதற்கும் ஊழல் முறைகேடுகளை களைவதற்கான அடிப்படையான காரணிகளை கண்டறிந்து அதனைப் போக்குவதற்கான நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தொழிற்சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என சந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ