×

காரைக்கால் பட்டய மருத்துவ மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு நடத்த புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை

காரைக்கால், அக்.18: காரைக்காலில் பட்டய மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி அரசு சார்பில், காரைக்காலில் அன்னை தெரசா செவிலியர் மருத்துவக் கல்வி நிலையம் மற்றும் தனியார் துணை மருத்துவ கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. கொரனோ தொற்று காரணமாக புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் செவிலியர் மற்றும் துணை மருத்துவ துறை உள்ளிட்ட அனைத்து கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வு இணைய வழியில் நடை பெற்றது. ஆனால் புதுச்சேரி நலவழித்துறை இயக்குனர் தலைமையில் இயங்கும், மருத்துவக் கல்வி குழுமத்தின் கீழ் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியிலேயே தேர்வு நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள அன்னை தெரசா செவிலியர் கல்லூரி தேர்வு மையமாகவும், இதில் சுமார் 150 மாணவர்களும் நாளை (19ம் தேதி) முதல் நான்கு நாட்கள் தேர்வில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டய வகுப்பு (டிப்ளமோ) மாணவர்கள், தங்களுக்கும் இணைய வழியில் தேர்வு நடத்த வேண்டும். இதற்கு புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Government ,Pondicherry ,Karaikal Chartered Medical Students ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...