×

குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு


திருப்பூர், அக்.18:திருப்பூரில் அமைய உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து, 14வது வார்டு ஸ்ரீ மகாலட்சுமி நகர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், பின்னலாடை நிறுவனத்தின் பெண்கள் விடுதி இருந்த இடத்தில் தற்போது கொரோனா சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் தனியார் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது என்பது பொதுமக்களுக்கு ஆபத்தையே உண்டாக்கும். அதிகாரிகளிடம் கேட்டால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் ஓய்விடம் என்கின்றனர். ஆனால், இதை எங்களால் நம்ப முடியவில்லை. அங்கு மருத்துவத்துக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்துவித உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆரம்பத்திலேயே எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். கடந்த 12ம் தேதி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்து, கொரோனா சிகிச்சை அமைக்க கூடாது என வலியுறுத்தினோம். ஆனால், மீண்டும் தற்போது பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, பெண்கள் விடுதியாக இருந்தபோது, கழிவறை தண்ணீர் எங்கள் பகுதிக்கு வரும். தற்போது கொரோனா நோயாளிகள் தங்கும் பட்சத்தில், கழிவறை தண்ணீர் மீண்டும் வெளியேறும். இதனால் நோய்த்தொற்று அதிகரிக்கவே செய்யும். ஆகவே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : corona treatment center ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...