சுற்றுலா பயணிகள் வருகை குறைவு நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

ஊட்டி,அக்.18: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் 6 மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்து ஊட்டி நடைபாதை ஸ்வெட்டர் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், குளிர் சற்று அதிகமாக காணப்படும். குறிப்பாக, அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் பனிப்பொழிவு நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இச்சமயங்களில் கடும் குளிர் காணப்படும்.உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பகலில் கூட ஸ்வெட்டர், ஜெர்கின், சால்வை, தொப்பி போன்றவைகள் இன்றி வெளியில் வர முடியாது. இதனால், ஊட்டி நகரில்  ஸ்வெட்டர், ஜெர்கின் விற்பனை செய்யும் கடைகளே அதிகமாக காணப்படும். இது தவிர சாலையோர, நடைபாதைகளிலும் ஏராளமான சிறு வியாபாரிகள் ஸ்வெட்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைபாதை வியாரிகளில் சிலர், வெளிநாடுகளில் இருந்து சிறு,சிறு குறைகளுடன் கொண்டு வரப்படும்  ஸ்வெட்டர், ஜெர்கின்கள் விற்பனை செய்கின்றனர். குளிர்காலம் துவங்கினால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இவர்களிடம் இந்த வெம்மை ஆடைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.  இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் வியாபாரம் செய்ய முடியாமல் போனது. இதனால், இவர்களின் வாழ்வாதரம் பாதித்தது. பலர், வேறு வேலைகளுக்கு சென்றனர். தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலர் மீண்டும் இந்த தொழிலுக்கு திரும்பியுள்ளனர். தற்போது அங்காங்கே இந்த வெம்மை ஆடை கடைகள் தென்படுகிறது. ஆனால், வழக்கத்தை காட்டிலும், மிகவும் குறைவோகவே சுற்றுலா பயணிகள் வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் மட்டுமே இவர்களின் வாழ்க்கை மாறும்.

ஊட்டி கமர்சியல் சாலை நடைபாதையில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், சுற்றுலா பயணிகளை நம்பியே இந்த கடைகளை வைத்துள்ளோம். உள்ளூர் மக்கள் குறைந்தளவே இந்த வெம்மை ஆடைகளை வாங்குவார்கள்.

ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதமாக இந்த ஆடைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எங்களது வாழ்க்கையை ஓட்டவே சிரமமாக உள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிந்து வழக்கம் போல் நாள்தோறும் ஊட்டிக்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவதற்கு முற்றிலும் தடை நீக்கப்பட்டால் மட்டுமே, எங்களது வாழ்க்கை சிறக்கும், என்றார்.

Related Stories:

>