×

கொரோனா பாதித்த பெண்ணுக்கு கருக்குழாயில் உருவான கரு அகற்றம்

கோவை,அக்.18: கோவை, ராக்கிப்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் கருக்குழாயில் கரு உருவாகியுள்ளதும், கொரோனா தொற்று பாதித்திருப்பதும் கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மூலமே கருவை அகற்ற முடியும் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். இதனிடையே அந்த பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு அறுவை சிகிச்சையில்லாமல் பாதுகாப்பான முறையில் கருக்குழாயில் இருந்து கருவை மகப்பேறு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ‘‘ இ.எஸ்.ஐ.யில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருக்குழாயில் 11 மில்லி மீட்டர் அளவில் கரு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கருவினை அறுவை சிகிச்சையின்றி வெளியேற்ற மகப்பேறு மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒருவாரத்தில் கருக்குழாயில் இருந்து கரு கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து கருக்குழாயில் இருந்து முழுவதுமாக வெளியேறியது. மகப்பேறு பிரிவு பேராசிரியர் கீதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையின்றி ஊசியின் மூலம் கருவினை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்,’’ என்றார்.

Tags :
× RELATED ஈச்சனாரி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது