×

பொதுப்பணித்துறை உதவி இயக்குநரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்

ஈரோடு,அக்.18: ஈரோட்டில் பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் வீட்டில்  கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என லஞ்ச  ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோடு பொதுப்பணித்துறை  முதுநிலை கொதிகலன் (பாய்லர்) உதவி இயக்குநர் மகேஷ் பாண்டி, தொழிற்சாலைகளில்  பாய்லர் உறுதி சான்று வழங்க லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி., திவ்யா தலைமையிலான  போலீசார் கடந்த 13ம் தேதி உதவி இயக்குநர் மகேஷ் பாண்டி அலுவலகத்தில் திடீர்  ஆய்வு நடத்தி கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பணத்தை கைப்பற்றினர்.  இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மகேஷ் பாண்டி (50) மற்றும்  அவருக்கு லஞ்சம் வாங்க புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலையை சேர்ந்த  ராஜ்குமார் (45) இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு  சங்கு நகரில் உள்ள மகேஷ் பாண்டியின் வீட்டில் ரூ.60 ஆயிரம் ரொக்கம்,  ரூ.30 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், மகேஷ்  பாண்டியனின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச  ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை  கைப்பற்றியுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி., திவ்யா  கூறியதாவது: பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், வீட்டிலும் ரொக்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல்,  தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிலும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரித்து, ஆவணங்கள்  அனைத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில்  ஆஜராகி, உரிய விளக்கம் அளித்தால், நீதிபதி அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பார்.

Tags : court ,Assistant Director of Public Works ,
× RELATED அரசு ஒப்பந்த பணிகளை செய்யும் ஏவிஎம்...