×

பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 2.5டன் குட்கா பறிமுதல்

ஆவடி, அக். 16: பெங்களூரில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 2.5டன் எடையுள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கன்ெடய்னர் லாரி மூலம் ஆவடி அருகே வெள்ளானூர், 400அடி வெளிவட்ட சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அவர் உத்தரவின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வெள்ளானூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கினர்.

 பின்னர், போலீசார் லாரியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது லாரியில் பிளாஸ்டிக் கோணியில் மூட்டை, மூட்டையாக குட்கா போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரியில் இருந்த 2.5டன் எடையுள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ₹10லட்சம் என கூறப்படுகிறது.  மேலும், லாரிக்கு பின்னால் காரில் சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதன் பிறகு,  குட்கா கடத்திய லாரி டிரைவர் மற்றும் காரில் வந்த மூவரையும் போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை லாரியில் சென்னை புறநகர் பகுதிக்கு கடத்தி கொண்டு வந்துள்ளனர். பின்னர், அதனை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏஜெண்ட் மூலமாக கடைகளுக்கு சப்ளை செய்ய விற்பனைக்கு அனுப்பி வைக்க இருப்பதும் தெரியவந்தது.

 புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், லாரியில் குட்காவை கடத்தி வந்த டிரைவர் ராஜஸ்தான் மாநிலம், ரத்தன்புரம்  பகுதியைச் சார்ந்த சஞ்சய்குமார் (32), மற்றும் சென்னை, சவுகார்பேட்டை, பத்ரீன் தெருவை சார்ந்த மகிபால்சிங்(26), அதே பகுதி, ஆதியப்பா நாயக்கன் தெருவை சேர்ந்த மகேந்திரகுமார் (27), ராஜஸ்தான், ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த அசோக்சிங் ராஜ்புட் (22), ஆவடியை அடுத்த கோடுவள்ளி, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகருப்பசாமி (28)  ஆகிய 5 பேர்களை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். சமீப காலமாக, கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்காவை  ஆவடி பகுதியில் உள்ள குடோன்களுக்கு கடத்தி வருகின்றனர். பின்னர் அதனை அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம்  விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 இது தொடர்பாக போலீசார் கடத்தி வரும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் நபர்களை கைது செய்கின்றனர். ஆனால், குட்காவை சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால், தான்  கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே,  போலீஸ் உயரதிகாரிகள் கவனித்து தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அப்போது தான் சென்னை, புறநகர் பகுதியில் குட்கா போதை பொருட்களின் கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்படும்  என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Chennai ,Bangalore ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை