×

கூட்டுறவு வங்கியில் பண மோசடி வங்கியை திறக்க கோரி 3வது நாளாக பொதுமக்கள் தர்ணா போராட்டம்

கடையம், அக். 16: கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பண மோசடி நடைபெற்றதையடுத்து வங்கியை திறக்க கோரி 3வது நாளாக வங்கி முன் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கோவிந்தப்பேரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு பணிபுரிந்த செயலாளர், எழுத்தர் ஆகியோர் ரூ.10 லட்சம் அளவில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இங்கு உறுப்பினராக உள்ள பலரது சேமிப்புக் கணக்கில் இருந்த பணம் மாயமானதாக தகவல் வந்தது. இதையடுத்து 13ம்தேதி உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கை சரி பார்த்ததில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி முன் உறுப்பினர்கள் திரண்டதால் வங்கி மூடப்பட்டது. 2வது நாளாக நேற்று முன்தினமும் ஏராளமானோர் திரண்டதால் வங்கி திறக்கவில்லை.

இந்நிலையில் நேற்று, மக்கள் தங்கள் நகைகளை திருப்பவும், நகைகள் மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் வங்கி முன்பு கூடினர். ஆனால் 3வது நாளாக நேற்றும் வங்கி திறக்கப்படவில்லை. இதனையடுத்து முஸ்லிம்லீக் கட்சியின் தென்காசி மாவட்ட அமைப்பாளர் அப்துல்காதர், ரவணசமுத்திரம் முன்னாள் பஞ்.தலைவர் புகாரி மீராசாகிப் தலைமையில் பொதுமக்கள் வங்கி வளாகத்தில் திரண்டனர். வங்கியை திறக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் எஸ்ஐக்கள் ஜெயராஜ், சரசையன், எஸ்எஸ்ஐ காளியா மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர்கள் முருகேஷ்வரி, இசக்கியப்பன் ஆகியோரும் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் வங்கி திறக்கப்பட்டதும் பணம் கொண்டு வந்தவர்கள் தங்களது நகைகளை மீட்டு சென்றனர். பலர் தங்களது நகைகள், பாஸ்புக்கை சோதனை செய்து சென்றனர்.

இதுகுறித்து கள அலுவலர் முருகேஷ்வரி, கூட்டுறவு சங்க மாவட்ட இணை பதிவாளரிடம் வங்கியில் நடந்த மோசடி குறித்து அறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது. முறையாக விசாரித்தால் பல கோடி மோசடி அம்பலமாகும்.

Tags : protest ,opening ,cash fraud bank ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா