×

எருமப்பட்டி அருகே மாயமான இளம்பெண் 3 மாதத்திற்கு பின் மீட்பு

சேந்தமங்கலம், அக்.16: எருமப்பட்டி அருகே மாயமான இளம்பெண், 3 மாதங்களுக்கு பின் மீட்கப்பட்டு, சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நாமக்கல்  மாவட்டம், எருமப்பட்டி அடுத்த ஜம்படையை சேர்ந்தவர் பெயிண்டர் சுப்ரமணி.  இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது  மனைவி அபிநயா(24). கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமான இவர்களுக்கு  குழந்தை இல்லை. அபிநயா நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 7ம்தேதி  வேலைக்கு சென்ற அபிநயா, பின்னர் வீடு திரும்பவில்லை.  அக்கம்பக்கம்  மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.  இதுகுறித்து,  சுப்ரமணி அளித்த புகாரின் பேரில், எருமப்பட்டி போலீசார், அபிநயாவை தேடிவந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.

 இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது  மனைவியை கண்டுபிடித்து தரும்படி,  சுப்ரமணி ஆட்கொணர்வு மனு தாக்கல்  செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அபிநயாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தும்படி எருமப்பட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில், எருமப்பட்டி எஸ்ஐ கதிரேசன் தலைமையில் தனிப்படை அமைத்து அபிநயாவை  தேடிவந்தனர். இந்நிலையில் அபிநயா, நாமக்கல் - மோகனூர் ரோட்டில் உள்ள,  ஒரு தனியார் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தது தெரியவந்தது.  இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அபிநயாவை மீட்டு விசாரணை நடத்தினர்.  அப்போது அபிநயா, தனக்கு கணவரை பிடிக்கவில்லை என்றும்,  இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர்  தெரிவித்தார். இதையடுத்து போலீசார், அபிநயாவை சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.

Tags : teenager ,Erumappatti ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை