×

அண்ணா பல்கலை விவகாரம் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.16: அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதை கண்டித்தும், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நேற்று திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் (கிழக்கு) ரஜினிசெல்வம், (மேற்கு) சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் (கிழக்கு) செந்தில், (மேற்கு) சேகர் முன்னிலை வகித்தனர். பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் வரவேற்றார்.  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., மேற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

இதில், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் சாந்தமூர்த்தி, கோவிந்தன், கோவிந்தசாமி, எக்கூர் செல்வம், சாமிநாதன், சுப்பிரமணி மற்றும் இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் சுந்தர்ராஜன், வேலுமணி, ராமு, கிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், மகேந்திரன், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

சூதாடிய 17 பேர் கைது:  ஓசூரில், வக்கீல் லேஅவுட் பின்புறம் ஏரிக்கரை பகுதியில் சூதாடிய வெங்கடேஷ் (40), ரமேஷ் (30), விநாயகம் (36) ஆகிய 3 பேரை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அதேபோல், பேரிகை-அத்திமுகம் வனப்பகுதியில் சூதாடிய குமார் (35), அமரேஷ் (32), சிவராஜ் (23) ஆகியோரும், தேன்கனிக்கோட்டை அரசு பஸ் டெப்போ பின்புறம் சூதாடிய சாதிக் (49), முனிராஜ் (29), அரிஸ்குமார் (29), நரசிம்மன் (29), அல்தாப் (45) ஆகியோரும்,கல்லூர் பகுதியில் சூதாடிய சங்கர் (32), வேலுசாமி (27) ஆகியோரும், மாதம்பதி அருகில் சூதாடிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை விற்ற 9 பேர் கைது: வேப்பனஹள்ளி போலீசார், தடதாரை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள் விற்ற அத்திகுண்டா சண்முகராவ் (46) என்பவரை கைது செய்தனர். இதேபோல், ஓசூர் சானசந்திரம் பகுதியில் புகையிலை விற்ற ரவிக்குமார் (25), உப்பாரப்பள்ளியில் சீனிவாசன், கல்லாவி ஓலப்பட்டியில் மகாலிங்கம் என புகையிலை விற்றதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

விபத்தில் வாலிபர் பலி: சூளகிரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்சர் மகன் அக்மல்(24). அதே பகுதியை சேர்ந்த சர்தார் மகன் பயாஷ் (25). இருவரும் சூளகிரி மார்க்கெட்டில் இருந்து கொத்தமல்லி, புதினாவை லாரியில் ஏற்றிக்கொண்டு ஆந்திராவுக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். ஆந்திரா அருகே சென்றபோது எதிரே வந்த டேங்கர் லாரி இவர்களது லாரி மீது மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி அக்மல் இறந்தார். பயாஷ் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேஆர்பி அணைக்கு நீர்வரத்து சரிவு: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, நேற்று 560 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து 628 கனஅடி தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 39.25அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 490 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து 114 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 47.35 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Tags : Anna University ,affair ,student demonstration ,DMK ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் !