×

சிதம்பரம் அருகே கை, கால்களை கட்டி போட்டு வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

சிதம்பரம், அக். 16: கடந்த 10ம் தேதி சிதம்பரம் புறவழிச்சாலையில், அழிஞ்சிமேடு கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் மின் கம்பத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.  தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பெயர் சந்தோஷ்குமார்(27) என்பதும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சென்னை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் சிதம்பரம் புறவழிச்சாலை அருகே சடலமாக கிடந்ததும் தெரிய வந்தது.

சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் மேற்பார்வையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதை தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(49), விழுப்புரம் மாவட்டம் ஆணைவாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(27), விருத்தாசலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, இறந்தவரிடம் கொள்ளையடித்த 1 லேப்டாப், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்டது குறித்தும், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்தும் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் மெக்கானிக் வேலை செய்ய செல்வதற்காக சந்தோஷ்குமார் சிதம்பரம் வந்துள்ளார்.

 அதன் பிறகுதான் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சிதம்பரம் நகரம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் இறந்துபோன நபருடன் 3 பேர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கொலையான சந்தோஷ்குமாருக்கு பெண்ணாசை காட்டி இரவில் சிதம்பரம் புறவழிச்சாலைபகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்று அவரிடம் பணம், நகை நிறைய இருக்கும். அதனால் அவரை கொலை செய்து விட்டு கொள்ளை அடித்து விடலாம் என திட்டமிட்டு சென்றிருந்தனர். பின்னர் அங்கு அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதில் ராஜேந்திரனை பரங்கிப்பேட்டையில் கைது செய்தோம். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சந்தோஷ்குமாரின் லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 3 பேருமே நாடோடிகளை போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு திரிந்து வந்துள்ளனர் என்பதும், இதில் இருவர் சிறு, சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : Chidambaram ,
× RELATED யானைகவுனி கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்ததால் விஜயகுமார் தற்கொலை