×

பெண் வன அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு வனப்பாதுகாவலர் மீது வழக்கு

புதுச்சேரி, அக். 16: பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக வனப்பாதுகாவலர் தினேஷ் கண்ணன் மீது பெண் துணை வனப்பாதுகாவலர் புகார் கொடுத்திருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி வனத்துறையில் துணை வனப் பாதுகாவலராக வஞ்சுளவள்ளி பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அந்தமான் நிக்கோபாரிலிருந்து இடமாறுதலில் புதுச்சேரிக்கு வந்தார். இதற்கிடையே வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளராக தினேஷ் கண்ணன் அண்மையில் பொறுப்பேற்றார். இந்நிலையில் வனப்பாதுகாவலர் தினேஷ்கண்ணன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் வஞ்சுளவள்ளி புகார் கொடுத்தார். அதில், கொரோனா  காலத்தில் அருணாசலபிரதேசத்தில் இருந்து வந்தபோதும், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அலுவலகம் வந்தார். எனது தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில்  பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து மோசமான வார்த்தைகளுடன் பேசத்தொடங்கினார்.

அதில் பாலியல் ரீதியான தொனி இருந்தது.  பணியிடத்தை தாண்டியும் அவரது தொந்தரவு நீண்டது.  கடந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகளில் நான் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் அடிப்படையில், தினேஷ் கண்ணன் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   கடந்த மாதம்தான் வனத்துறை அதிகாரியாக தினேஷ் கண்ணன் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உடன் பணியாற்றி வரும், வஞ்சுளவள்ளிக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவது, தேவையில்லாமல் போனில் பேசியதாக கூறப்படுகிறது. அந்த குறுந்தகவலை ஏன் இதுவரை பார்க்கவில்லை, அதற்கு ஏன் பதில் அனுப்பவில்லை என கேட்டு தினேஷ்கண்ணன் டார்ச்சர் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் அவர் தொடர்ந்து  பணியிடத்திலும் தனக்கு பல்வேறு பிரச்னை கொடுத்ததாக வஞ்சுளவள்ளி தெரிவித்திருக்கிறார்.

Tags : forest ranger ,forest officer ,
× RELATED மருத்துவ படிப்பில் ஓ.பி.சி...