×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருக்க முதல்வர் உத்தரவு

புதுச்சேரி, அக். 16: வட கிழக்கு பருவமழை எதிர்கொள்வது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி,  ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அனைத்து துறை செயலர்கள், இயக்குநர்கள், வருவாய் பேரிடர் துறை, கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: நம்முடைய மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் மழை வெள்ளம் வந்தால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, தேவையான மருந்து கொடுக்கவும், 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கவும், தடையின்றி குடிநீர் கொடுக்கவும், டெங்கு வராமல் இருக்க அந்தந்த பகுதிகளில் தேவையான கிருமி நாசினி அடிக்கவும்,  அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகளை வைத்திருக்கவும், தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை மூலம் வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பு இருக்கும் சமயத்தில், மற்ற நோய்கள் வரும்போது தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மருந்துகளை வீடுகளுக்கே சென்று கொடுக்கவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் சிக்கி தவித்தால் காவல்துறை, கடலோர காவல்படை இணைந்து அவர்களை காப்பாற்றவதற்கான நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாகவும் பேசப்பட்டது. அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் துறையாக வருவாய்த்துறை இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழை அதிகளவில் பெய்தாலும் கூட பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், இந்தாண்டு மழை பெரிய அளவில் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 அக். 26ம் தேதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் அக்டோபர், நவம்பரில் மிகப்பெரிய கனமழை பெய்யும். அந்த சமயத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,departments ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...