×

அச்சப்படவைக்கும் காட்சி கோபுரம், தள்ளாடும் சங்கு...... அழகை இழந்த சங்குதுறை கடற்கரை

நாகர்கோவில், அக். 16: குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் பல முக்கிய தலங்கள் உள்ளன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலா தலத்துகளுக்கும் செல்வது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரி அருகே உள்ள சொத்தவிளை, சங்குதுறை பீச்சுக்கும் ஏராளமானோர் செல்கின்றனர். அழகிய மணற்பரப்பு கொண்ட கடற்கரை என்பதால் இங்கு மாலை நேரம் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். குழந்தைகள் கடற்கரையில் விளையாடுவதை விரும்புவார்கள்.
இந்நிலையில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சொத்தவிளை, சங்குதுறை பீச் பொலிவிழந்து காணப்படுகிறது. இங்கு போடப்பட்டு உள்ள காங்கிரீட் இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது. சங்குதுறை பீச்சின் முக்கியத்தை விளக்கும் வகையில் இந்த பீச்சின் முன் பகுதியில் ராட்சத சங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கு சேதமாகி கீழே விழும் நிலையில் உள்ளது.

  சங்குதுறை பீச்சிற்கு வரும் சுற்றுலா பயணிகள், கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்து பார்த்தால் அந்த பகுதி முழுவதும் உள்ள எழில்மிகு தோற்றத்தை கண்டு ரசிக்கலாம். போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் காட்சி கோபுரத்தின் மேல்பகுதியில் உள்ள பாதுகாப்பு சுவர்கள் அனைத்தும் உடைந்துள்ளன. இதனால் காட்சி கோபுரத்திற்கு மேல் பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அது போல் காட்சி கோபுரத்தின் தரை பகுதியில் உள்ள மண் கடலரிப்பால் அரித்துச்செல்லப்பட்டுள்ளது. இதனால்  தரையின் கீழ் உள்ள காங்கிரீட் பில்லர்கள் வெளியே தெரிகிறது.
 சுற்றுலா பயணிகள் காட்சி கோபுரத்திற்கு மேல் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் பகல் நேரங்களில் குடிமகன்கள் மது குடிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

 இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சங்குதுறை பீச்சை அழகுபடுத்தி, உரிய பாதுகாப்பும் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் ஆஸ்டின் எம்எல்ஏ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சுற்றுலாதலங்கள் ஏராளம்  உள்ளன. கன்னியாகுமரி அருகே சொத்தவிளை பீச், சங்குதுறை பீச் மற்றும் மணக்குடி எக்கோ பார்க் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றுலா தலங்களை வளர்ச்சிபெற செய்யாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனை மேம்படுத்த தொடர்ந்து சட்டமன்றத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்து வருகிறேன். கடந்த 2001ம் ஆண்டு நான் எம்எல்ஏவாக இருந்த போது சொத்தவிளை பீச்சில் சிறுவர் பூங்கா அமைக்க நிதிஒதுக்கினேன்.

இந்த காலகட்டத்தில் சொத்தவிளை பீச், சங்குதுறை பீச் ஆகியவற்றை மேப்படுத்த பல நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்குதுறை கடற்கரையில் உள்ள காட்சிகோபுரங்கள், சங்குதுறை பெயர் காரணமான ராட்சத சங்கு ஆகியவை சேதமாகியுள்ளது. இதனை சீரமைக்கவும், சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், சுற்றுலாத்துறை, மற்றும் ஊராட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. சுற்றுலா தலத்தில் புதிய கட்டுமானங்கள், பூங்கா போன்றவை செய்யவேண்டும் என்றால் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிசெய்யலாம் என்றார்.

Tags : conch beach ,viewing tower ,
× RELATED சங்குதுறை பீச்சில் இடிந்துவிழும்...