×

இதுவும் கடந்து போகும் மனம் ஆரோக்கியமாக இருக்க உடல் நலம் பேண வேண்டும் உலக மன நல தின கருத்தரங்கில் அறிவுரை

நாகர்கோவில், அக்.16: கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மனம் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் என டாக்டர்கள் கூறினர். உலக மன நல தினத்தையொட்டி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பணியில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், பயிற்சி டாக்டர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். துறை தலைவர் அப்துல் ரகுமான், மனநல டாக்டர் ஜஸ்டின் பவுல் ஆகியோர் மன அழுத்தத்தை குறைப்பதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கினர். மருத்துவமனை கண்காணிப்பாளரும், மன நல மருத்துவருமான டாக்டர் அருள்பிரகாஷ், உதவி உறைவிட மருத்துவர்கள் டாக்டர் ரெனிமோள், விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டீன் சுகந்தி ராஜகுமாரி பேசுகையில், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நான்கில் ஒருவர் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், அனைவருமே ஒரு மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. உலகம் முழுவதும் மனநல பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மன நலத்துக்கு ஆதரவான முயற்சிகளை ஒன்று திரட்டுவதும் முக்கிய நோக்கம் ஆகும் என்றார்.
மருத்துவமனை கண்காணிப்பாளரும், மன நல மருத்துவருமான டாக்டர் அருள் பிரகாஷ் பேசுகையில், தற்போதைய தொற்று பரவல் கால கட்டத்தில் நோயாளிகள், டாக்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுவே பெரிய மன அழுத்தம் ஆகும். என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்ற அச்சம் வேண்டாம். முதலில் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஒன்று தான் மிகப்பெரிய பலம். அந்த பலம் அதிகமாக இருந்தால் எதையும் சமாளிக்க முடியும். எனவே அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய கால கட்டாயம் ஆகும்.

கொரோனா மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. இன்னும் 2 மாதங்களில் ஓரளவு நிலைமை சரியாகி விடும். மன அழுத்தம் ஏற்பட உடல் நலம் பேணாமல் இருப்பதும் ஒரு காரணம் ஆகும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் திறனை அதிகரித்து கொண்டால் எந்த தொற்றும் நம்மை தாக்காது. இப்போதுள்ள இளைஞர்கள் செல்போன், டி.வி. என்றே பொழுதை கழிக்கிறார்கள். இவற்றுக்கு அடிமையாகி அதுவே பெரிய மன அழுத்தத்தை தந்து விடுகிறது. மன தைரியம் இல்லாமல் தான் தற்கொலைகள் நடக்கின்றன. எனவே காலை அல்லது மாலையில் நிச்சயம் உடற்பயிற்சி, விளையாட்டுக்கு என நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் வேறு எந்த பணியும் ெசய்ய கூடாது. முழுக்க, முழுக்க உடல் நலத்தை பேணும் போது, மனமும் ஆரோக்கியமாக இருந்து எளிதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற எண்ணம் வரும் என்றார்.

Tags : seminar ,World Mental Health Day ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்