×

குமரியில் தொடரும் மழை பெருஞ்சாணி அணையில் மறுகால் திறப்பு

நாகர்கோவில், அக்.16: பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து மறுகாலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. இருப்பினும் நேற்று பகல் வேளையில் மழை குறைந்திருந்தது. மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக குமரி மாவட்ட பாசன அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அனைத்து அணைகளிலும் சேர்த்து மொத்தம் 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து காணப்பட்டது.

நேற்று பெஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியதால் முதல்கட்டமாக அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 74 அடியை கடந்த நிலையில் வினாடிக்கு 2500 கன அடி வரை தண்ணீர் வந்துகொண்டிருந்தது.  தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டது.  தண்ணீர் வரும் அளவை பொறுத்து இது 2500 கன அடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  இதனை போன்று பேச்சிப்பாறை அணையும் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளதால் நேற்று அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.60 அடியாக இருந்தது. அணைக்கு 3169 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 112 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 73.80 அடியாகும். அணைக்கு 2474 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.
சிற்றார்-1ல் 13.84 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 183 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. 75 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
சிற்றார்-2ல் 13.94 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 12.20 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 33 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். மாம்பழத்துறையாறு அணை நிரம்பிவிட்ட நிலையில் அணைக்கு 73 கன அடி தண்ணீர் வந்து ெகாண்டிருந்தது.  73 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணை நீர்மட்டம் 22.7 அடியாகும். அணைக்கு ஏழு கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணையில் இருந்து 7.42 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நேற்று காலை வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியலில் 52.4 மி.மீ மழை பெய்திருந்தது.

திங்கள்சந்தை: குமரிமாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை ெபய்து வருகிறது. திங்கள்சந்தை, இரணியல், குருந்தன்கோடு பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. வள்ளியாற்றில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை மற்றும் காற்றால் வில்லுக்குறி, இரணியல், மேக்கோடு, பிலாக்கோடு உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. மரவெள்ளி கிழங்கு போன்றவை பாதிக்கப்பட்டன. மழையால் தலக்குளம், ஆளூர், வெள்ளத்திவிளை ஆகிய பகுதிகளில் மின்கம்பங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை மற்றும் காற்றால் திங்கள்சந்தையில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் செட்டியார்மடம் ஆத்திகோட்டவிளை பகுதியில் சாலையோரம் நின்ற  புளிய மரம் வேருடன் சாய்ந்து விஜயகுமாரி என்பரது வீட்டின் மீது விழுந்தது.  இதுபோன்று காற்றினால் இரணியல், திங்கள்சந்தை, சுங்கான்கடை பகுதியில் தொடர் மின்தடை ஏற்பட்டது.

Tags : Kumari Re-opening ,Perunchani Dam ,
× RELATED பெருஞ்சாணி அணை மூடப்பட்டது