×

அகமலை ஊராட்சியில் விவசாயப் பணிகளை தடுக்கும் வனத்துறை நடவடிக்கை கோரி மலைக்கிராம மக்கள் ஓபிஎஸ்சிடம் மனு

பெரியகுளம், அக். 16: போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள அகமலை ஊராட்சியில் ஊத்துக்காடு, கரும்பாறை, பெரியமுங்கில், சின்னமுங்கில், பேச்சியம்மன் சோலை உட்பட்ட மலைக்கிராம மக்கள், சொர்க்கமலை விவசாய சங்கம் சார்பில் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மலைக்கிராமங்களில் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். வனப்பகுதியில் விவசாயம் செய்வது மட்டுமே எங்கள் தொழில். எங்களுக்கு சொந்தமான பட்டா மற்றும் அனுபவ பாத்தியப்பட்ட நிலங்களில் மலைவாழை, மிளகு, காப்பி, ஏலம், பலா, ஆரஞ்சு, அவகோடா, எலுமிச்சை அகிய பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம்.

இந்நிலையில், சமீபகாலமாக வனத்துறையினர் எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கும், விவசாயப்பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த ஏலச்செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும் 15 நாட்களுக்குள் விவசாய நிலங்களை காலி செய்யும்படி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனவே, எங்களுக்குச்சொந்தமான விவசாய நிலங்களில் நிரந்தரமாக விவசாயம் செய்ய அனுமதிக்கவும், எங்கள் பகுதியில் தேவையான சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Tags : OBS ,Agamalai ,
× RELATED சென்னையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை