×

50 ஆண்டுகள் ஏழை மாணவர்களுக்கு கல்வியை தந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு காவி சாயம் பூசுவதா? திமுக மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி பேச்சு

சின்னாளபட்டி, அக். 16: 50 ஆண்டுகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியை தந்த அண்ணா பல்கலைக்கழகத்தை அதிமுக அரசு மத்திய அரசிடம் அடகு வைத்து காவி சாயம் பூச பார்க்கிறது என ரெட்டியார்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கையகப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து திமுக மாணவரணி, இளைஞரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன் தலைமை வகிக்க, துணை அமைப்பாளர்கள் சூசை ராபர்ட், வெள்ளிமலை, துரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, மணி, நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால்உசேன், பார்த்தசாரதி, மாயக்கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக மாநில துணை பொதுச்செயலாரும், எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஐபி.செந்தில்குமார் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘இந்த அண்ணா பல்கலைக்கழகம் கலைஞர் முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஆண்டுதோறும் 100க்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பொறியாளராக தேர்வு பெற்றுள்ளனர். 50 ஆண்டுகள் பழமையான இப்பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் மண்டியிட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிற எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அடகு வைத்து காவி சாயம் பூச பார்க்கிறது.

அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்து கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தை அழிக்க நினைக்கும் அதிமுக அரசின் அவலங்களையும், மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சியையும் இங்கு கூடியிருக்கிற மாணவர்கள், இளைஞர்கள் வீடுதோறும் சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் விவசாயத்தை அழித்தார்கள். தொழில்வளத்தை அழித்தார்கள். இன்று கல்வி செல்வத்தையும் அழிக்கிறார்கள். அதற்காக கொண்டு வரப்பட்டவர்தான் இந்த சூரப்பா. இட ஒதுக்கீடுக்கு எதிராக செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும். அதற்கு தமிழக மக்கள் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணியினர், மாணவரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anna University ,Deputy General Secretary ,DMK ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...