×

சேதுராப்பட்டி அரசு கல்லூரி முன் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.16: இந்திய கல்வி நிறுவனங்களை உலக தர வரிசைப்பட்டியலில் இடம்பெற வைக்கும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கல்வி நிறுவனங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மாநில அரசின் நிதி தேவையில்லை என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் ரூ.1,500 கோடி நிதி திரட்டிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஒரு மாநிலத்தின் முதல்வர் போல் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்நிலையில் இடஒதுக்கீட்டிற்கும், மாநில நிதி உரிமைக்கும் எதிராக செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டிப்பது, உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மாநில அரசிடம் இருக்கும் உயர் கல்வி உரிமையை இழக்க கூடாது. அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி அருகே மணிகண்டம் அடுத்துள்ள சேதுராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரி முன் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

Tags : DMK ,Government College ,Sethurappatti ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி