×

ஆயக்காரன்புலம்-2ம் சேத்தியில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் மணிமண்டபம் காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

வேதாரண்யம்,அக்.16: வேதாரண்யத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாகை தெற்கு மாவட்ட அவைத்தலைருவமான மீனாட்சி சுந்தரத்தின் மணிமண்டபம், படத்திறப்பு விழா, ஆயக்காரன்புலம்-2ம் சேத்தியில் நடைபெறுகிறது. மணிமண்டபத்தையும், மீனாட்சிசுந்தரம் படத்தையும், காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 1937ம் ஆண்டு தனது 17 வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார். முதன் முதலில் ஆலத்தம்பாடி ஊராட்சியின் திமுக கிளை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1970ல் திருத்துறைப்பூண்டி வட்ட செயலாளராக தேர்வு பெற்றார். அதன் பின்னால் தஞ்சை மாவட்ட திமுக துணை செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், கீழத்தஞ்சை மாவட்ட திமுக செயலாளர், திருவாரூர் மாவட்ட திமுக அவைத்தலைவர், பொதுக்குழு உறுப்பினர், நாகை தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் என திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் 1976-ல் மிசாவிலும் சிறை சென்றவர். 1971, 1977, 1984 மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வேதாரண்யம் நகராட்சியின் தலைவராக பதவி வகித்த காலத்தில் நகராட்சியின் பொற்காலம் என்று சொல்லலாம்.

கஜா புயல் காலத்தில் உப்பளத் தொழிலாளர்கள் 2500 பேருக்கு முதன் முதலில் நிவாரணம் வழங்கியவர். கொரோனா காலத்தில் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் நிவாரண பணியில் ஈடுபட்டார்.கடவுள் மறுப்பு கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருந்தவர். மூட நம்பிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்தவர். இவரின் இரண்டு பிள்ளைகளின் திருமணத்தையும் ராகு காலத்தில் மேற்கு திசை நோக்கி அமரவைத்து கலைஞர் தலைமையில் நடத்தி காட்டி எல்லோருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தார். இவரின் பெரும் தொண்டினைபாராட்டிகடந்த 15.9.2020ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். அவ்வாறு பெருமைமிக்க உள்ள மா.மீனாட்சிசுந்தரத்தின் மணிமண்டபம், படத்திறப்பு விழா இன்று (16ம்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் திமுகவினர் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.

Tags : Meenakshi Sundaram Manimandapam ,Ayakkaranpulam-2 Sethi ,MK Stalin ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...