×

போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்கள் அம்மாப்பேட்டை பகுதியில் அரசு நிர்ணயித்துள்ள விலையை மீறி உரங்களை விற்பனை செய்யக்கூடாது

பாபநாசம், அக். 16: அம்மாப்பேட்டை அரசு நிர்ணயித்துள்ள விலையை மீறி உரங்களை விற்பனை செய்யக்கூடாது என்று வேளாண் உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் தற்போது 25,000 ஏக்கர் பரப்பில் சம்பா நடவு பணிகள் முடிந்துள்ளன. இயல்பான பருவமழை பெய்ததாலும், மேட்டூர் அணை நீர்வரத்து உள்ளதாலும் இன்னும் 1,500 ஏக்கர் பரப்பில் தாளடி நடவு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடியுரம் மற்றும் மேலுரம் இடும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு ரசாயன உரங்கள் இருந்தாலும் தழைச்சத்து உரமான யூரியாவை ஏழை, எளிய விவசாயிகள் விரும்பி வயலுக்கு அதிகளவில் இடுகின்றனர். நாட்டின் உணவு உற்பத்தியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் உரங்களின் விலை அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் உற்பத்தி, விற்பனை ஆகியவை உர கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஆணையின்படி அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலைக்கு மிகாமல் உரங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். அரசின் மானியத்தில் உற்பத்தியாகும் உரங்கள் முறையான விவசாய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். எடை, தரம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். வாங்கும் விவசாயியின் ஆதார் எண் கொண்டு பட்டியலிடப்பட வேண்டும். விவசாயிகளின் நில அளவுக்கேற்ற உரங்களை மட்டுமே வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

உர விற்பனை நிலையம் துவங்கும்போதே இந்த ஆணையின்படி நடப்பதாக விற்பனையாளர்கள் ஒப்பு கொள்கின்றனர். அதன்பின்னர் அதிக விலைக்கு உரங்களை விற்பது, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது, ஒரே நபர் பெயரில் அளவுக்கு அதிகமான உரங்களை பட்டியலிடுதல் போன்ற செயல்களில் உர விற்பனையாளர்கள் ஈடுபடக்கூடாது. எக்காரணம் கொண்டும் அரசு நிர்ணயித்துள்ள விலையை மீறி விற்பனை செய்யக்கூடாது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
விவசாயிகள் உரங்களின் தற்போதைய விலையை உழவன் செயலி மூலம் எளிதாக அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உர விற்பனையில் தரம், மற்றும் விலையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடன் தங்கள் பகுதி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Ammapettai ,government ,
× RELATED 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் வண்டி...