×

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் புதுகையில் நடந்தது

புதுக்கோட்டை, அக்.16: வடகிழக்கு பருவமழை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு பின்னர் அரசு முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்ததாவது, மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் பள்ளி கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர்கள் தங்கும் இடங்களிலேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து பாதுகாப்பாக வழங்கவும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குளங்கள் மற்றும் ஊரணிகள் ஏதேனும் உடைப்பு ஏற்படும் நிலையில் இருந்தால், அதனை உடனுக்குடன் சரி செய்வதுடன் தேவையான மணல் மூட்டைகளையும் தயார்நிலையில் வைத்திருக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மழைக்காலங்களில் சாயும் மின்கம்பங்கள் மற்றும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அலுவலர்கள் உடனுக்குடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Northeast ,monsoon reservation consultation meeting ,Pudukkottai ,
× RELATED மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்