×

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஊராட்சி தலைவர் புகார் திம்மூரில் டிராக்டர் மோதி இறந்த பெண் தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி தர்ணா

பெரம்பலூர், அக்.16: ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின்போது டிராக்டர் மோதி இறந்த பெண்ணுக்கு நிவாரணம் கோரி பெரம்பலூரில் வி.தொ.சங்கம் அறிவித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பால் பஸ் ஸ்டாண்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திம்மூர் ஊராட்சியில் நடந்த 100 நாள் வேலைத்திட்டத்தின்போது பணிக்கு பயன்படுத்திய டிராக்டர் மோதிய விபத்தில் மரணமடைந்த அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி ஜெயலட்சுமி என்ற பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் ஊழல்களை, முறைகேடுகளை களைந்திட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூரில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கு பெரம்பலூர் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனால் அகில இதிய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டில் ஒன்று திரண்டனர். அங்கு மாநிலத் தலைவர் லாசர் தலைமையில் மாநிலச் செயலாளர் சின்னதுரை, மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, கலையரசி, ராஜாங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்டத் தலைவர் காசிராஜன், திமுக சார்பாக மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் பிரபாகரன், விசிக சார்பாக மாநிலச் செயலாளர் வீரசெங்கோலன், செய்தித் தொடர்பாளர் ஸ்டாலின், மமக சார்பாக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா, திக சார்பாக மாவட்டத் தலைவர் தங்கராசு, நகரத் தலைவர் ஆறுமுகம், முஸ்லீம்லீக் சர்புதீன், எஸ்டிபிஐ முகமது ரபீக் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், இறந்த பெண்ணின் கணவர் சீனிவாசன், பிள்ளைகள், உறவினர்களுடன் திம்மூர் கிராமத்தினர் நூற்றுக்கணக்கானோருடன் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் புது பஸ் ஸ்டாண்டில் சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு பேரணியாகச் சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

அவர்களுடன் பெரம்பலூர் டிஎஸ்பி (பொ) ஜவஹர்லால், தாசில்தார் பாரதிவளவன், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கலெக்டர் சாந்தா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 100 நாள் வேலைக்கு டிராக்டர் பயன்படுத்தியது குறித்து தலைவர், துணைத்தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். ஊராட்சி செயலாளர், ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசின் நிவாரணத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதன்பிறகு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இறந்த பெண்ணின் பிள்ளைகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான வைப்புத் தொகை வழங்குவதாக அறிவித்து ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

Tags : panchayat leader ,office ,Perambalur SP ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்