×

காங்கயம் அருகே கார்பன் உற்பத்தி தொழிற்சாலையால் 10 ஆயிரம் மக்கள் பாதிப்பு


திருப்பூர், அக். 16: காங்கயம் அருகே தனியாருக்குச் சொந்தமான கார்ன் உற்பத்தி தொழிற்சாைலயால் 10 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலி மூலம் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று நடந்தது. இதில், 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

காணொலியில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பேசியதாவது: திருப்பூர், காங்கயம் வட்டமலை கிராமத்தில் தனியார் கார்பன் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரும்புகையால் விளை நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் பயன்படுத்திய கழிவுநீரை அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் இறக்குவதால், விவசாயம் மற்றும் மக்கள் குடிக்க பயன்படுத்தும் கிணற்று நீராதாரங்கள் முழுமையாக கெட்டுவிட்டது. அவிநாசிபாளையம்புதூர், ஜெஜெ நகர் மற்றும் அருகில் உள்ள வட்டமலை கிராமப் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதனால் பலரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம், சப்-கலெக்டரிடமும் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதன் மீது கலெக்டர் தனி கவனம் செலுத்தி தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பயிர்க்கடன், விவசாய நகைக்கடன், மத்திய கால கடன் மற்றும் விவசாயம் தொடர்பான இதர கடன்கள் கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட சங்கங்களிலேயே அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு சிரமமின்றி கடன் பெற்று வந்தனர். தற்போது நகரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கும் 5 முதல் 10 கி.மீ. தொலைவு உள்ளது.

தற்போது வங்கியில் கடன் பெறும் ஒருவர், குறைந்தபட்சம் 15 நாட்கள் அலைய வேண்டி உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினர் பெரும் சிரமத்துக்கும் ஆளாகின்றனர்.  ஆகவே புதிய நடைமுறையை கைவிட்டு, மீண்டும் பழைய நடைமுறையிலே வழங்க வேண்டும். திருப்பூர், பொங்குப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பரமசிவம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சேர்ந்த குட்டை தூர் வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், மழைக்காலங்களில் நீர் தேங்காமல் போய்விடுகிறது. ஆகையால், விவசாயத்திற்கு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இல்லாம் வீணாகிறது. எனவே, குட்டையை உடனடியாக துர்வாரி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். அதிகாரிகள் கூறுகையில், ‘கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் மனோகரன்,  கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Kangayam ,carbon production plant ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...