×

எம்.பி.க்களின் எண்ணிக்கை பலம் இருந்தாலும் பயத்தோடு இருக்கும் அரசு மோடி அரசுதான்

திருப்பூர், அக். 16: திருப்பூர் மாவட்ட ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் சங்க 20ம் ஆண்டு விழா ரயில்வே கூட்செட் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ரயில்வே கூட்செட் தொழிலாளர் சங்கத் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக செங்கொடியை சி.ஐ.டி.யு. மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன் ஏற்றி வைத்து பேசியதாவது:  ரயில்வே கூட்செட் தொழிற்சங்கத்தினர் 16 அம்ச சங்க விதிகளை வெளிப்படையாக எழுதி வைத்து அதன்படி செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. உண்மையில் இந்த விதிகளை மோடி அரசு படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதநேயத்தைப் பின்னுக்குத் தள்ளி மதநேயத்தை முன்வைத்து, அதை அரசியலோடு பின்னிப் பிணைக்கும் வேலையை மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு செய்து வருகிறது.

 இது நாட்டை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.  பெரும்பான்மை மதத்தை முன்வைத்து சிறுபான்மையினரைத் தாக்குவது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரையும் அடக்கி ஒடுக்கக்கூடியதாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடாது என்பதுதான் இந்த அரசின் நோக்கம். மக்கள் ஒன்றுபட்டு எழுந்தால் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவார்கள் என்பதால் இந்த அரசு நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை பலத்தோடு இருந்தாலும், பயத்தோடுதான் இருக்கிறது.

எனவே மக்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டால் இந்த அரசை பின்னுக்குத் தள்ள முடியும். வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருப்பவர், அந்த வீட்டையே விற்றால் எப்படி இருக்கும், அதுபோலத்தான் இந்தியா எனும் நாட்டின் சொந்தக்காரர்கள் மக்கள். ஆனால் வாடகைக்கு வந்தவர் போல ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி இந்த நாட்டின் அடிப்படை சொத்துகளை, செல்வ வளங்களை தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறார். இப்படி சொந்த வீட்டை விற்கத் துணியும் வாடகைக்காரரை ஏற்க முடியுமா? ஆனால் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உ.பி., பீகார் என எல்லா இடங்களிலும் போராட்டம் வலுவாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அடுத்து நடக்கப் போகும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்னோட்டம்தான் இந்த ஒரு நாள் அடையாளப்பூர்வ வேலை நிறுத்தம். இதை தொழிலாளர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதில், மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கருப்பசாமி, ஆறுமுகம், தங்கவேல் ஆகியோர் திருவுருவப் படங்களை சி.ஐ.டி.யு. மாநிலத் துணைத் தலைவர் சந்திரன் திறந்து வைத்தார். சங்கத்தின் 20ம் ஆண்டு விழா நினைவுக் கல்வெட்டை, சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன மாநிலச் செயலாளர் வெங்கிடுபதி திறந்து வைத்தார். இதில் சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபால், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : government ,MPs ,Modi ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...