திருப்பூர், அக். 16: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என தொ.மு.ச. சார்பில் மின்சார வாரிய தலைவருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன், தமிழக மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 12 ஆயிரம் அதிகாரிகள் உள்பட 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதில், ஒப்பந்த தொழிலாளர்களாக 10 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.
கடந்த தீபாவளிக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் 3 மற்றும் 4-ம் நிலை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இவ்வாண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊரடங்கின்போது தினசரி பணிகளுக்கு வந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்து, உயிரிழந்த ஊழியர்களுக்கு, நிவாரண உதவி வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு, ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே போனஸ் நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தையை மின்சார வாரிய நிர்வாகம் உடனே நடத்த நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு 30 சதவீதம் போனஸ் தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.