×

யானை வழித்தட பிரச்னையில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு வந்த பின்னரே முழு விவரங்களும் தெரிய வரும்

ஊட்டி,அக்.16: உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதிக்கு வந்த பின்னரே யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான முழு விவரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது.
ஊட்டி அருகேயுள்ள மசினகுடி,பொக்காபுரம்,வாழைத் தோட்டம், சிங்காரா, மாயார் போன்ற பகுதிகள் முதுமலை புலிகள் காப்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இது யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. முதுமலையில் இருந்து சத்தியமங்கலம் வரை யானைகள் வழித்தடம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை வனத்துறை மற்றும் யானை ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், முதுமலையில் உள்ள வன உயிரினங்களை காண நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வெளி நாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக முதுமலை புலிகள் காப்பத்தில் ஓய்வு விடுதிகள் உள்ளன. எனினும், இது போதுமானதாக இல்லை. இந்நிலையில், மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா மற்றும் வாழைத் ேதாட்டம் போன்ற பகுதிகளில் ஏராளமான ரெசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்கள் கட்டப்பட்டன.

இவைகளில் பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் ரெசார்ட்டுகள் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் யானைகள் வழித்தடம் மறுக்கப்படுவதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கடந்த இரு ஆண்டுக்கு முன் இவ்வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வெளியிட்டது. அதில், யானைகள் வழித்தடத்தில் உள்ள ரெசார்ட் மற்றும் காட்டேஜ்களை இடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து 34 ரெசார்ட் உரிமையாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், இதனை நிறைவேற்றுவது தொடர்பாக நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த குழு வந்த பின்னரே மசினகுடி யானை வழித்தட பிரச்னையில், எந்தெந்த கட்டிடங்கள் அகற்றப்படும். மேலும், இந்த தீர்ப்பின் மூலம் யானைகள் வழித்தடத்தில் கட்டிடங்களை கட்டியுள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் இதர வணிக ரீதியான கட்டிடங்களுக்கும் பாதிக்குமா என்பது தெரிய வரும். இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான முழு விவரங்களும் தெரிய வரும். இதில், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை, என்றார்.

Tags : panel ,arrival ,Supreme Court ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...