×

கண்ணமங்கலம் அருகே நெகிழ்ச்சி பெற்றோரை இழந்து நிர்கதியாய் நின்ற சகோதரிகளுக்கு பசுமை வீடு

கண்ணமங்கலம், அக்.2: கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் பெற்றோரை இழந்து நிர்கதியாய் நின்ற சகோதரிகளுக்கு, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பசுமை வீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(50), விவசாயி. இவரது மனைவி சசிகலா(45). மகள்கள் மோனிஷா(22), அனுசுயா(19). சசிகலா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சாமிநாதனும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், தாய், தந்தையை இழந்து சொந்த வீடு, வாழ்வாதாரம் இல்லாமல் சகோதரிகள் நிர்கதியாகி நின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று முன்தினம், சகோதரிகளை நேரில் சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அரசு சார்பில் பசுமை வீடு, அனுசுயா கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான முழுச்செலவு, ஆன்லைனில் படிக்க ₹10 ஆயிரத்தில் இலவச ஆன்ட்ராய்ட் செல்போன், ₹1 லட்சம் நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, தாசில்தார் செந்தில், ஆரணியில் உள்ள தனியார் கல்லூரியில் அனுசுயாவை சேர்க்க நடவடிக்கை எடுத்தார். மேலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அவர்களுக்கான பசுமை வீடு கட்டும் பணிக்கு, அரசு அதிகாரிகள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். பெற்றோரை இழந்து நிர்கதியாய் நின்ற சகோதரிகளுக்கு, கலெக்டர் நேரில் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கியதை அறிந்து, அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : sisters ,house ,parents ,Kannamangalam ,
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!