கஞ்சா ஆசாமி வெறிச்செயல் தகராறை தடுத்த போலீஸ்காரருக்கு சரமாரி பிளேடு வெட்டு

வேலூர், அக்.2:குடியாத்தத்தில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட கஞ்சா ஆசாமியை தடுத்த போலீஸ்காரருக்கு சரமாரி பிளேடு வெட்டு விழுந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில் தாழையாத்தம் பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு கஞ்சா ஆசாமி ஒருவர் போதையில் நடுரோட்டில் பொதுமக்களுடன் ஆபாசமாக பேசியபடியும், பிளேடை காட்டியபடியும் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீஸ் கான்ஸ்டபிள் கண்மணி அங்கு விரைந்து சென்று தகராறை தடுத்து கஞ்சா ஆசாமியை பிடிக்க முயற்சித்தார். இதில் ஆத்திரமடைந்த கஞ்சா ஆசாமி, தான் வைத்திருந்த பிளேடால் போலீஸ் கான்ஸ்டபிளின் முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இந்த தாக்குதலில் கான்ஸ்டபிளின் கன்னம், காது, கழுத்து ஆகிய பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக போலீஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டது, தடுக்க வந்த போலீஸ் கான்ஸ்டபிளை பிளேடால் வெட்டியது குடியாத்தம் ஜோதி மடம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி நவீன்குமார்(26) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சா வியாபாரி நவீன்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>