×

கொலை வழக்கின் விசாரணையை டிஎஸ்பி கண்காணிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, அக். 2: விருதுநகர் மாவட்டம், சுத்தமடம் அருகே திருமலைபுரத்தைச் சேர்ந்த முத்துவிஜயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது இளைய மகன் முத்துராமலிங்கம் (24) பிப். 20ல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமுதாய பிரச்னை காரணமாக கொலை நடந்தது போல காட்ட முயற்சித்துள்ளனர். இதனால் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான் வியாபாரத்திற்காக சென்றபோது என்னையும் சிலர் தாக்க முயன்றனர். என் மகன் கொலைக்கு காரணமானவர்களை குறிப்பிட்டு புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம். இதுகுறித்து திருச்சுழி இன்ஸ்பெக்டரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். வக்கீல் ஜான்ராஜதுரை ஆஜராகி, ‘‘கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார். அரசு வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி, ‘‘கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது. கொலையில் ஒருவர் மட்டுமின்றி மேலும் 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இப்படித்தான் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட முடியாது. திருச்சுழி இன்ஸ்பெக்டரின் விசாரணையை திருச்சுழி டிஎஸ்பி கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Tags : branch ,ICC ,investigation ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...